நாட்டுப்புறவியல் ஆய்வாளர் பிருந்தா பெக்(Brenda Beck) அவர்களைச் சந்தித்த இனிய பொழுது…
என் கனடாப் பயணத்தில் பேராசிரியர் பிருந்தா பெக் அவர்களை அவர்தம் இல்லத்திற்குச் சென்று சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இவர் கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்று விளங்கும் பொன்னர் சங்கர் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தவர்(1964-66). ஓர் ஆய்வாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றார். இவர்தம் இல்லத்தில் ஆய்வு சார்ந்து தொகுத்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் நமக்கு முன்மாதிரியாக உள்ளன. தமிழ்நாட்டுச் சாயலில் இரண்டு குதிரைகளைத் தம் தோட்டத்தில் வடிவமைத்து வைத்துள்ளார்.
நான் தங்கியிருந்த இல்லத்திலிருந்து சற்றொப்ப 160 கி.மீ பயணம் செய்து அவரைக் கண்டு அவர்தம் ஆய்வுகள், அவர்தம் பல்வேறு பணிகள் குறித்து சற்றொப்ப மூன்றுமணி நேரம் உரையாடி அரிய செய்திகளைப் பெற்றுத் திரும்பினேன்.
220 ஏக்கர் நிலத்தின் நடுவில் அமைந்த இயற்கை எழில்கொஞ்சும் அவர்தம் இல்லத்தையும், ஏரியையும் பசுஞ்சோலைகளையும் கண்ட மனநிறைவில் அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். அன்புடன் விருந்தோம்பிய பிருந்தா அவர்களையும் அவரின் கணவரையும் எண்ணி எண்ணி வியக்கின்றேன்.
இந்தப் பயணத்திற்கு உரிய ஒழுங்கினைச் செய்து உதவிய திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்களுக்கும் உடன் வருகை தந்த சண் மாஸ்டர் அவர்களுக்கும் என்றும் நன்றியன். விரிவான செய்தியை ஓய்வில் எழுதுவேன்.